தெலுங்கிலிருந்து, ‘காதலில் விழுந்தேன்’ மூலம் தமிழுக்கு வந்தவர் சுனேனா. அதன் பிறகு ‘மாசிலாமணி’ என்று ஆரம்பித்த அவரது பயணத்தில் சிறு இடைவெளி. இப்போது மாநிறம். எண்ணை தடவிய தலை. பாவாடை தாவணி சகிதம், ‘வம்சம்’ படத்தில் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் சுனேனா கண்ணீர் விட்டு அழுதபோது ஒட்டுமொத்த மீடியாவும் அதிர்ச்சி அடைந்தது.
“இதுக்கு முன்னாடி நான் பல பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் நான் உணர்ச்சிவசப்பட்டதே இல்லை. ஆனால் ‘வம்சம்’ படத்திற்காக மேடையிலேயே அழுதது நிஜமானது. அது ஆனந்த கண்ணீர். அதுக்கு பின்னாடி இருக்குறது என்னோட உழைப்பு. படத்துக்காக, புதுக்கோட்டை கத்திரி வெயிலில் காய்ந்து, கலங்கலான நீர் நிறைந்த கண்மாயில் குளித்து. கரடுமுரடான பாதையில் ஓடி, வயற்காட்டில் வழுக்கி விழுந்து, நான் நடித்த படம். மேடையில் நான் நின்றபோது அந்த கஷ்டத்தையும் அதனால் கிடைக்கப்போகும் உயர்வையும் நினைத்தபோது என்னால் அழாமல் இருக்க முடியவில்லை. இமயமலை ஏறும்போது நிறைய சிரமங்களை சந்திப்பவர்களுக்கு எவரெஸ்ட் சிகரத்தில் கொடி நாட்டும்போது சின்னதாக ஒரு சொட்டு கண்ணீர் வருமே, அதுமாதிரிதான் அந்த அழுகையும். மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்த, ‘வம்சம்’ யூனிட்டிற்கு எனது நன்றிதான் அந்த கண்ணீர்”
படத்தில் அப்படி பிரமாண்ட கேரக்டரா?
கிராமத்தில் வாழ்ந்த, கிராமத்தோடு தொடர்புடைய ஒவ்வொரு மனிதனையும் தொட்டுவிட்டுச் செல்லும் மலர்கொடி கேரக்டர் அது. படத்தின் கேரக்டரைப் பற்றி விரிவாக எனக்குச் சொல்லத் தெரியவில்லை. படம் பார்க்கும்போது சுனேனா அன்று அழுதது சரிதான் என்று உங்களுக்கு தோன்றும்.
‘காதலில் விழுந்தேன்’ படத்துக்கு பிறகு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?
வெளியிலிருந்து பார்க்கத்தான் அப்படித் தெரிகிறது. ஆனால், நிஜத்தில் நான் பிசி. ‘காதலில் விழுந்தேன்’ ஹிட்டுக்கு பிறகு ‘மாசிலாமணி’யும் பெயர் வாங்கி கொடுத்தது. அதன்பின், ‘திருத்தணி’, ‘கதிர்வேல்’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். இரு படத்திலும் பாடல்கள் மட்டுமே பாக்கி. ‘யாதுமாகி’ இடையில் வந்த நல்ல படம். ஆனால் மக்களை சென்று சேரவில்லை. அதன் பிறகு ‘வம்சம்’. இந்த படத்தை முடிக்காமல் வேறு படத்தில் நடிப்பதில்லை என்று முடிவு செய்தேன். இப்போது முடிந்து விட்டது. அந்த இரண்டு படங்களிலும் அடுத்து கவனம் செலுத்துவேன்.
கிளாமருக்கு எதிரானவரா?
அப்படியில்லை. இதுவரை கிளாமராக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதை தேடியும் அலையவில்லை. முதலில் சுனேனா தமிழ்நாட்டு பெண்களில் பிம்பமாக மாற வேண்டும். பிறகு ரசிகர்கள் விரும்பினால் கிளாமராக நடிப்பேன்.
வேறு மொழி படங்களில்…?
தெலுங்கிலிருந்துதான் வந்தேன். ஆனால், தமிழ் எனக்கு பிடித்துப்போய்விட்டது. ஒரு நல்ல நடிகைக்கு தமிழ் மாதிரி வேறு களம் அமையாது. இங்கு நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. பிறகு அடுத்த மொழி பற்றி யோசிக்கலாம்.
0 comments