தாய் பாடிய தாலாட்டு தான் இளையராஜாவை உலகறிய செய்தது என்று இசையமைப்பாளரும், இளையராஜாவின் தம்பியுமான கங்கை அமரன் தெரிவித்தார்.
குற்றாலத்தில் சாரல் திருவிழாவின் இறுதிநாள் விழா நேற்று இரவு நடைபெற்றது. இவ்விழாவி்ல் திரைப்பட இயக்குனர் கங்கை அமரனின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கங்கை அமரன் பேசியதாவது…
இன்று திரைப்படங்கள் தமிழ் பெயருடன் வெளிவந்தாலும் அதில் போதிய தமிழ் வார்த்தைகள் பாடல்களில் இல்லை. தமிழுக்காவே வாழும் முதல்வர் நமக்கு கிடைத்திருக்கிறார். அவர் தமிழுக்காற்றும் தொண்டிற்காக நம் தலைமுறையே அவருக்கு கடன்பட்டிருக்கிறது.
தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. சிலர் பொறுப்புக்கு வந்திருந்தபோது ஆங்கிலத்தை தவிர வேறோன்றும் கிடையாது. அவர் பேச்சு, பேட்டி என அனைத்தும் ஆங்கிலம் தான். ஆனால் நம் முதல்வர் அப்படி அல்ல.
இன்று தமிழ்படங்கள், பாடல்களில் வீரம், அறிவு, தாலாட்டு உள்ளிட்ட நல்ல விஷயங்களை உள்ளடக்காமல் உள்ளது. அன்றைக்கு வந்த திரைப்படங்களில் நல்ல தகவல்கள் இருந்தன. ஆனால் இடைப்பட்ட காலங்களிலும் இது போன்ற திரைப்படங்கள் இல்லாமல் வெற்றிடம் இருந்தது. தற்போது சில திரைப்படங்கள் பழைய திரைப்படங்களை போன்று வெளிவந்து அந்த இடத்தை நிரப்புகிறது.
இன்று நாங்கள் உங்கள் முன்பும் உலகமறியும் அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு காரணம் எங்கள் தாய், எங்களுக்கு தாலாட்டோடு தமிழ் பற்றினை ஊட்டியதுதான். அன்னக்கிளி பாடலை எங்கள் தாய் தாலாட்டாக பாடினார். அந்த பாடலைதான் எங்கள் அண்ணன் இளையராஜா முதல் படத்தில் பாடினார். அந்த தாலாட்டு பாடல்தான் எங்களை உலகறிய செய்தது என்றார் கங்கை அமரன்
0 comments