நீங்கள் செல்பேசியை அதிகம் பயன்படுத்துபவரா? அதாவது ஒவ்வொரு நாளும் வணிக ரீதியாகவோ, கல்வித் தொடர்பாகவோ மற்றவர்களுடன் நீ்ண்ட நேரம் செல்பேசியில் பேசக் கூடியவரா? அப்படியென்றால் செல்பேசியால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பாக செய்யப்பட்டுள்ள ஆய்வுகளையும் அதன் முடிவுகளையும் நீங்கள் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.
நாம் செல்பேசியில் நீண்ட நேரம் பேசினால் நமது காதைச் சுற்றி வெப்பம் தாக்குவதையும், அதனால் ஒரு விறுவிறுப்பு ஏற்படுவதையும் நிச்சயம் உணர்ந்திருப்போம். செல்பேசி வெப்பமடைந்திருப்பதையும் கவனித்திருப்போம். ஆனால், இவை யாவும் நமக்கு உடல் ரீதியான ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவையே என்பதை உலகம் உணர்ந்த அளவிற்கு இந்தியாவில் நாம் பெரிதாக உணரவில்லை.
உலக நாடுகளில் இதுபற்றிய உணர்தல் அதிகரித்துள்ளது. “செல்பேசியில் இருந்து வெளிப்படும் நுண்ணிய ஒலி அலைகளால் உருவாகும் ஒருவித கதிர் வீச்சு நமது உடலில், குறிப்பாக நமது மூளையில் செயல்பட்டுவரும் உயிரணுக்களை பாதிக்கின்றன, டிஆக்சிரிபோ நியூக்ளிக் ஆசிட் (டிஎன்ஏ) என்றழைக்கப்படும் நமது மரபிண குணங்களை வார்த்தெடுக்கும் அணுக்களை அவை சம நிலை பிறழச் செய்கின்றன. இதன் விளைவாக புற்றுநோயை உருவாக்கும் கட்டிகளும், மற்ற நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களையும் உண்டாக்குகின்றன” என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
உலக சுகாதார அமைப்பும் இண்டர்ஃபோன் என்ற அமைப்பின் மூலம் 13 ஐரோப்பிய நாடுகளில் செல்பேசியை அதிகம் பயன்படுத்திவருவோர் 5,000 பேரிடம் ஒரு பெரும் ஆய்வை நடத்தி முடித்துள்ளது. அதன் அறிக்கையும் வெளிவந்துள்ளது. ஆயினும், செல்பேசியால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசனையளிக்கக் கூடிய ஒரு தெளிவான வழிகாட்டல் அறிக்கையை அது வெளியிடவில்லை. ஆயினும், இண்டர்ஃபோன் ஆய்வும் பாதிப்பை உறுதி செய்துள்ளது.
செல்பேசியை அதிகம் பயன்படுத்துவோரிடம் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளை ஒன்றுபடுத்தி ஆய்வு செய்த கலிபோர்னியா பல்கலையின் பேராசிரியர் ஜோயல் மாஸ்கோவிட்ஸ், “10 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான காலத்திற்கு மிக அதிகமாக செல்பேசியை பயன்படுத்துபவர்களுக்கு மூளைப் புற்று நோய் தாக்கும் வாய்ப்பு 30 விழுக்காடு அதிகம் உள்ளது” என்று கூறியுள்ளார்.
பிட்ஸ்பர்க் பல்கலையில் நடத்தப்பட்ட ஆய்வும் இந்தப் பாதிப்பை உறுதி செய்துள்ளது. ஆனால், இங்கிலாந்தின் தேச புற்றுநோய்க் கழகம், “செல்பேசியைப் பயன்படுத்துவதால் அப்படிப்பட்ட ஆபத்து ஏதும் இல்லை” என்று கூறியுள்ளது. ஆயினும் செல்பேசியால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும் ஆலோசனைகளில் ஐரோப்பிய நாடுகள் இறங்கியுள்ளன.
உதாரணத்திற்கு, செல்பேசி பயன்படுத்துவதால் மூளைக்கு ஏற்படும் பாதிப்பைத் தடுக்க ஒரு சட்டத்தையே பிரான்ஸ் நாட்டின் இரு அவைகளும் சமீபத்தில் நிறைவேற்றியுள்ளன. தொலைத் தொடர்பு ஒலிக்கற்றைகள் மூளையைப் பாதிக்காவண்ணம், புதிதாக செல்பேசியை வாங்குவோர் அனைவருக்கும் காதில் வைத்துப் பேசக்கூடிய ஏர்ஃபோன்களை சேர்த்தே விற்குமாறு தயாரிப்பாளர்களை அந்நாடு அறிவுறுத்தியுள்ளது (இதன் விளைவாகவே இப்போதெல்லாம் நாம் செல்பேசி வாங்கினால் அதன் கூடவே இலவசமாக ஒரு ஏர்ஃபோன்கள் அளிக்கப்படுகிறது. அது வளர்ந்த நாடுகளில் கட்டாயம். இங்கு ஒரு கூடுதல் வசதியாக அளிப்பதுபோல் கொடுக்கிறார்கள்).
அதுமட்டமல்ல, செல்பேசியை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் இப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை (குடி குடியைக் கெடுக்கும், குடிப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் என்பது போன்ற) வாசகங்களுடன் விற்குமாறும், செல்பேசியை பயன்படுத்தும்போது எந்த அளவிற்கு நீங்கள் ஒலிக்கற்றை கதிர் வீச்சிற்கு ஆளாகின்றனர் என்ற அளவை (specific absorption rate - SAR) குறிப்பிடும்படியும் பிரான்ஸ் அறிவுறுத்தியுள்ளது.
“செல்பேசிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து தற்போது எந்த ஒரு உறுதியான ஆதாரமும் இல்லை என்கிற ஒரு அடிப்படையே அது பாதுகாப்பானது என்பதற்கான அத்தாட்சியல்ல” என்று பிரான்ஸ் அறிவியலாளர் பேராசிரியர் டேனியல் ஊபர்ஹெளசன் கூறியுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் சுற்றுச்சூழல் நல அறக்கட்டளை எனும் அமைப்பை நடத்திவரும் அறிவியலாளரான முனைவர் தேவ்ரா டேவிஸ் ‘டிஸ்கனக்ட்’ எனும் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். “செல்பேசியில் வெளியாகும் கதிர்வீச்சு தொடர்பான உண்மைகள், அவைகளை மறைக்க செல்பேசி தயாரிப்பாளர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், உங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்தப் புத்தகம் மேற்கத்திய உலகில் ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் புத்தகத்தில் செல்பேசியால் ஏற்படும் பாதிப்புத் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பற்றிய முழு விவரங்களையும் அளித்துள்ளார் தேவ்ரா டேவிஸ்.
சுற்றுச் சூழல் மற்றும் தனி மனித நடத்தைகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நோய்கள் குறித்து ஆய்வு செய்துவரும் பேராசிரியர் முனைவர் பிரான்ஸ் அட்கோஃபர், செல்பேசியில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு நமது மரபுத் தன்மையை பாதிக்கிறது என்றும், மூன்றாம் தலைமுறை செல்பேசிகள் (3G), இரண்டாம் தலைமுறை செல்பேசிகளை விட மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்றும் கூறியுள்ளார்.
செல்பேசியால் ஏற்படும் பாதிப்பு தொடர்பாக அதன் தயாரிப்பாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள பாதிப்பைக் காட்டிலும் இரு மடங்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது சுதந்திரமான ஆய்வுகளில் இருந்து தெரியவருகிறது.
ஒரு நாளைக்கு 2 முதல் 4 மணி நேரம் செல்பேசியைப் பயன்படுத்துபவரின் உயிரணுவை விட, செல்பேசியைப் பயன்படுத்தாதவரின் உயிரணு பலமாக உள்ளது.
சாதாரணமாக தண்ணீர் தொட்டிகளில் விழுந்த எலி, மிகச் சுலபமாக நீந்தி வெளியே வந்து விடுகிறது. ஆனால் செல்பேசியின் கதிர் வீச்சிற்கு ஒரு மணி நேரத்திற்கு உள்ளாக்கப்பட்ட எலியானது, தண்ணீர் தொட்டிக்குள்ளேயே சுற்றி சுற்றி நீந்தி வருகிறது. இதற்குக் காரணம் அதன் மரபணுவில் ஏற்பட்ட பாதிப்பு அதன் இயல்பான திறனை மழுங்கடித்துவிட்டதே.
தங்கள் நாட்டில் சிறுவர்கள் செல்பேசியை பயன்படுத்த பிரான்ஸ் நாடு தடை விதித்துள்ளது. இரஷ்யா, இங்கிலாந்து, கனடா, பெல்ஜியம், இஸ்ரேல், ஃபின்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் சிறுவர்கள் செல்பேசியை பயன்படுத்த வேண்டாம் என்றும், அதனை பெற்றோர்கள் கவனித்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளன.
இஸ்ரேல் நாட்டின் பல் மருத்துவர்கள் சங்கம் நடத்திய ஆய்வில், கன்னத்தில் ஏற்படும் மிக அரிதான புற்றுநோய்க்கு சிகிச்சை பெற வந்தவர்களில் ஐந்தில் ஒருவர் மிக அதிகமாக செல்பேசியை பயன்படுத்தி வருபவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
செல்பேசியை அதிகம் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எந்த அறிவியலாளர் ஆய்வு மேற்கொண்டாலும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் நிதியுதவியை தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி நிறுத்தியுள்ளன செல்பேசி தயாரிப்பு நிறுவனங்கள். அதுமட்டுமின்றி, அப்படிப்பட்ட ஆய்வில் ஈடுபட்ட பல அறிவியலாளர்கள் ஆய்வு அமைப்பில் இருந்தே தூக்கி எறியப்பட்டுள்ளனர் என்பதையும் தேவ்ரா தனது புத்தகத்தில் ஆதாரத்தோடு குறிப்பிட்டுள்ளார்.
இவையணைத்தையும் குறிப்பிட்ட தேவ்ரா டேவிஸ், செல்பேசிகளை பயன்படுத்த வேண்டாம் என்று கூறவில்லை!
இன்றைய நவீன யுகத்தில் செல்பேசியின்றி வாழ்வில்லை என்ற நிலையில் உள்ள நாம் அதனை காது வைத்து பேச வேண்டாம் என்றும், காதில் பொறுத்திக்கொண்டு பேசக் கூடிய ஒலி வாங்கிகளைப் (ஏர்ஃபோன்கள்) பயன்படுத்தியே பேசுமாறும் கூறியுள்ளார்.
செல்பேசிகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து உலக நாடுகள் உரிய எச்சரிக்கைகளை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும், அது தொடர்பான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
எனவே செல்பேசியை பயன்படுத்துவோர் கீழ்கண்ட பாதுகாப்பான வழிகளை கையாள வேண்டும்:
1. செல்பேசியை ஏர்ஃபோன்களுடன் மட்டுமே பயன்படுத்துங்கள்
2. அதனை பேண்ட் பாக்கட்டிலோ, சட்டை பாக்கெட்டிலோ தொடர்ந்து நீண்ட நேரம் வைத்திருக்காதீர்கள் (பயண நேரத்தில் மட்டும் அவ்வாறு வைத்திருப்பது தவிர்க்க இயலாதது).
3. அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும்போது அதனை மேசையின் மீது வைத்திருங்கள்.
4. இயன்ற அளவிற்கு செல்பேசியில் பேசுவைத் தவிர்த்து, குறுஞ்செய்திகளாக தகவல்களை பரிமாறிக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.
புற்று நோயை வருவதைத் தடுக்க, அது உருவாகும் சூழல் அமையாமல் தடுப்போம் என்று கூறுகிறார் தேவ்ரா டேவிஸ்.
மிகச் சரியான வழிதான்.
0 comments