வர்ண பேதம் தெரியாத குருடு போவுல் எப்படி ஸ்பானிய கொடிக்கும், கொலன்ட் கொடிக்கும் பேதம் அறியும் ?
கிளி ஜோதிடத்தை விட மோசமான போவுலிடம் சிக்குப்பட்ட மூடர்களின் உலகம்..
இன்று ஜேர்மனி வெல்லும் மணி என்னும் சிங்கப்பூர் கிளி கூறுகிறது..
நாளை உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தின் இறுதிச் சுற்று நடைபெற இருக்கிறது. இன்று உலக மக்களிடையே உதைபந்தாட்ட வீரரைவிட பிரபலமான வீரனாகத் திகழ்வது கணவாய் அல்லது நட்சத்திரமீன் வகையை சேர்ந்த போவுல்தான். இதை நம்மூரில் ஆறுகால் பாறாத்தை என்று கூறுவார்கள். உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர்களின் பெயர்களை உச்சரிப்பதைவிட போவுலின் பெயர்தான் இப்போது பிரபலம்.
இதுவரை நடைபெற்ற போட்டிகளில் எல்லாம் யார் வெல்வார் என்பதை போவுல் சொல்லியிருக்கிறது, அதுபோலவே நடந்துமிருக்கிறது. இந்தப் போவுல் எந்த நாட்டு கொடிப்பக்கமாகப் போகிறதோ அந்தநாடு வெல்லும் என்று கருதப்படுகிறது. அந்தவகையில் இறுதியாட்டத்திலும் ஸ்பானியாவே வெல்லும் என்று போவுல் தெரிவித்துள்ளது. இன்று ஜேர்மனி வெல்லும் மணி என்னும் சிங்கப்பூர் கிளி கூறியிருக்கிறது..
போவுல் உண்மையாகவே சொல்கிறதா இல்லை இதற்குப் பின்னால் மனிதன் இருந்து விளையாடுகிறானா என்பதை நாம் அறிய வேண்டும். போவுல் என்ற இந்த உயிரினம் வர்ணக்குருடு என்று டென்மார்க் உயிரின பாதுகாப்புப் பிரிவு அதிகாரி இன்று அறிவித்துள்ளார்.
இத்தகைய கணவாய் உயிரினத்திற்கு வர்ண வேறுபாடு தெரியாது, இந்த நாட்டுக் கொடிக்கும் அந்த நாட்டுக் கொடிக்கும் வர்ண வேறுபாடு தெரியாத போவுல் ஓர் ஆட்டத்தின் முடிவை ஒருகாலமும் சொல்ல முடியாது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார் அந்த அதிகாரி.
இதுவரை சரியாக சொல்லிவிட்டது போவுல் என்பதற்காக சூதாட்டக்காரர் இறுதி ஆட்டத்தில் ஸ்பானியா வெல்லுமென பெருந்தொகைப் பணத்தைக் கட்ட வாய்ப்புண்டு. அதற்கு அமைவாக முன்னரே போவுலின் தீர்ப்பை வெளியிட்டுவிட்டார்கள். பேதைகள் பணத்தைக் கட்ட ஆட்டம் அடிதலையாக மாற, கோடான கோடி பணத்தை போவுலின் பெயரில் சுருட்ட சூதாட்டக்காரரால் முடியும். இதுவரை சரியாக வந்த போவுலின் கணக்கு இறுதியில் பிழைத்துவிட்டதென இவர்கள் சமாதானம் கூறி போவுல் கணிப்பு ஒரு சிறிய வேடிக்கை என்று மூட்டையைக் கட்டிவிட வாய்ப்புள்ளது.
விளையாட்டு வீரருக்கு உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும் செயல் இது.
உதைபந்தாட்ட சூதாட்டத்தில் பணம் கட்டுவோரை தவாறாக வழிநடாத்தலாம்..
இத்தகைய செயல் ஊடகங்களில் அடைந்துள்ள முக்கியம் இளைய சமுதாயத்தை மூடர்களாக உருவாக்கலாம்..
போவுல் சொன்னதென இம்மாதிரி மீனினத்தை வைத்து கொலைகளைக் கூட செய்ய முயலலாம்..
இப்படி சமுதாய அக்கறை உள்ளவர்கள் சிந்திக்க இடமுண்டு.
இது சிரிப்பாக பார்க்க வேண்டிய விடயமல்ல பாரதூரமாகப் பார்க்க வேண்டிய விடயமாகும்.
பொதுவாக சாதாரண உதைபந்தாட்ட அறிவுடைய ஒருவரே இறுதியில் யார் வெல்வார்கள் என்பதைக் கணிக்கக் கூடியவாறுதான் இன்றய உலகக் கிண்ண ஆட்டங்கள் தரங்குன்றியவையாக உள்ளன. அதற்கு அமைவாக போலை நகர்த்தி செல்கிறார்களா என்பது ஆய்வுக்குரியது. சிறிய சிறிய பொருட்களிலேயே போவுலுக்கு பேதம் தெரியாது அது எப்படி எங்கோ நடக்கிற போட்டி முடிவைச் சொல்ல முடியும் என்று சிந்திக்க பலரால் முடியவில்லை.
அக்காலத்தே பூம் பூம் மாட்டுக்காரன் என்று ஒருவன் வருவான். ஐயா பேரு கந்தசாமிதானே என்று மாட்டைப்பார்த்துக் கேட்கும் மாட்டுக்காரன் ஆதேபோல மேலும் கீழுமாக தலையாட்டுவான் மாடும் மேலும் கீழுமாக தலையாட்டும். மாட்டின் கெட்டித்தனம் என்று அறிவிலிகள் கைதட்டுவார்கள். இதுதான் பூம்பூம் மாட்டுக்காரன் வித்தை. இதுபோலத்தான் கிளி ஜோதிடமும் நடைபெறும். அதுபோலத்தான் போவுல் கணிப்பும் என்று எண்ண இங்கு நாதியில்லை.
இப்படிப்பட்ட போவுல் கணிப்பை இன்று உலகமே இவ்வளவு பெரிதாக நம்புகிறது என்றால் அது குறித்து ஒவ்வொரு பொறுப்புள்ள குடிமகனும் ஆழமாகச் சிந்திப்பது அவசியமாகும். நாம் எவ்வளவு பெரிய முட்டாள்களின் உலகில் வாழ்கிறோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டிய நேரம் இதுவாகும். ஆதி காலத்தே தென்னமெரிக்காவில் ஒரு குடும்பத்தில் ஒருவர் கழுத்தை அறுத்தாலே சூரியன் வருமென நம்பி கழுத்துகளை அறுத்தார்கள். வருடம் தோறும் நடக்கும் இந்த விழாவால் இறந்தவர்கள் பல்லாயிரம். அன்றைய மூடத்தனமான மக்களை விட இன்றய மனிதன் எவ்வளவு முன்னேறியுள்ளான் என்று யோசித்தால் மனிதன் திருந்தவே இல்லை என்பதுதான் உண்மையாகிறது. நாளை போவுல் சொன்னது என்று ஒரு நாட்டின் மீது போர் தொடுத்து ஓர் இனத்தையே அழிக்க முற்பட்டால் நமது முட்டாள்களின் உலகம் அதையும் நம்பும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்.
மேலும் எண்ணற்ற உலக மோசடிகளும், அப்பட்டமான பொய்களும், மாபெரும் மூடத்தனங்களும் இப்படியான போவுல்களின் பெயரில் உலக மன்றில் அரங்கேறலாம். அப்போதும் அவைகளை நம்ப மனிதன் தயாராகவே இருப்பான் என்பதற்கு போவுல் கதையைவிட வேறு எந்த ஆய்வும் அவசியமில்லை.
குருடும் குருடும் சேர்ந்து குருட்டாட்டம் போட்டன என்று தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. அதுபோல வர்ணபேதம் தெரியாத ஒரு குருட்டுக் கணவாயை நம்பி கோடிக்கணக்கானவர் பணம் கட்டும் உலகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைத்து வெட்கப்படவோ அச்சப்படவோ இங்கு யாருக்கும் நேரமில்லை.
உலகில் மிகப்பெரிய போர்களும், இறுதி முடிவுகளும் இப்படியான போவுல்களிடம் சாத்திரம் கேட்டு நடைபெற்ற நிகழ்வுகளே. மதியூக மந்திரி, மதியூக தலைவர், உலக உளவுப்பிரிவு, தனிப்பெரும் தலைவர் என்று பேசப்படுவதெல்லாம் வெறும் புருடாக்களே என்பதும், உலகின் அனைத்து முடிவுகளுமே பூவா தலையா போட்டுப் பார்த்த முடிவுகளே என்பதும் மறுபடியும் உறுதியாகியுள்ளது.
இப்படித்தான் விக்கிரமாதித்தன் கதையில் ஒரு கிளி வரும். அந்தக் கிளி மந்திரி பட்டிக்கு எதிராக சாட்சி சொல்ல இருந்தது. ஓர் இரவு மட்டும் கிளியை தன்னிடம் தரும்படி கேட்ட பட்டி அதை ஒரு தகரப் பாத்திரத்தில் மூடி வைத்துவிட்டு, அதன்மேல் சொட்டு சொட்டாக தண்ணீரை மழைத்துளி போல சிந்த விட்டான். மறுநாள் சாட்சி சொல்ல வந்த கிளி இரவெல்லாம் ஒரே மழை என்று சாட்சி சொன்னது.
கிளிகள் உட்பட பறவைகள் மிருகங்களை நம்பி எதையும் செய்வது தவறு என்று ஐயாயிரம் வருடங்களுக்கு முன் பட்டி நிரூபித்தும் மனிதன் திருந்தவில்லை.
விஞ்ஞானம் வளர வளர, அறிவு பெருகப் பெருக மனித குலம் அதைவிட மோசமாக மூடர்களாகி வருகிறது என்பது ஆபத்தான உண்மையாகும். இன்று போவுல் என்ற ஆறுகால் பாறாத்தையிடம் எதிர்காலத்தை ஒப்படைத்த உலகம் மானிடத்திற்கு மகத்தான ஆபத்தானது. மேலும் எதிர்கால உலகம் அறிவான மனிதர்களுக்கு பாதுகாப்பானதல்ல என்பதே போவுல் தரும் உண்மைச் செய்தியாகும். போல் சொல்வதுபோல வெற்றி தோல்விகள் முடிவாகின்றன என்றால் போட்டிகள் எதற்கு போர்கள் எதற்கு..
அன்று மனிதர்களைப் பார்த்து சித்தர்கள் ஏன் சிரித்தார்கள் என்பது இன்று மேலும் ஒரு படி தெளிவாகப் புரிகிறது..
0 comments